அடையாளமில்லார்க்கு...

 

வலதுசாரிப் பொருளாதார வளர்ச்சியா... வலதுசாரி கலாசார மீட்டெடுப்பா... எது இந்தியாவின் வழிகாட்டிக் கோட்பாடாக இருக்கவேண்டும்?

வாஜ்பாய் தலைமையிலான பாஜக மட்டுமல்ல; நரேந்திர மோதி தலைமையிலான பாஜகவுமே தேசத்தின் பொருளாதார முன்னேற்றம்; அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி இவற்றுக்கே முக்கியத்துவம் தந்துவருகிறது.

அத்வானி பிரதமரானால் இந்து கலாசார மீட்டெடுப்புக்கு முக்கியத்துவம் தருவார் என்று அவருக்கு பதிலாக வாஜ்பாய் பிரதமராக்கப்பட்டார். நரேந்திர மோதி அத்வானியைப் போலவே கலாசார விஷயங்களில் தீவிரமாகச் செயல்படுவார் என்று ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது.

ஆனால், அவர் குஜராத்தில் ஆட்சியில் இருந்த பத்தாண்டுகளில் நேர்த்தியான நிர்வாகம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என முழுக்கவும் வாஜ்பாய் பாணியிலான நல்லாட்சியையே வழங்கினார். பிரதமரான பின்னரும் உயர் தொகை மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை என பொருளாதார சீர்திருத்த்த்துக்கே முக்கியத்துவம் தந்துவருகிறார்.

பொருளாதாரத்தில் வலுவாக இருந்தால்தான் கலாசார, மரபுகளைப் பாதுகாத்துப் பின்பற்றமுடியும் என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இது எந்த அளவுக்கு சரி.

தமிழகத்தில் சல்லிக்கட்டு விளையாட்டை வைத்து தமிழ் தேசிய அடையளம் மீட்டெடுக்கப்பட்டது. சரியாகச் சொல்வதென்றால் இந்திய எதிர்ப்பு கூர்மைப்படுத்தப்பட்டது.

சீமானும் அவருடைய ஆதரவாளர்களும் முதலில் பொருளாதாரத் திட்டங்களை முன்வைப்போம். அதன் பின்னர் அடையாள மீட்பைப் பார்த்துக்கொள்வோம் என்று நினைக்கவில்லை.

இவ்வளவு ஏன் பாஜகவே ரத யாத்திரை என்ற அடையாள மீட்பை முன்வைத்துத்தான் கட்சியை மக்களிடையே கொண்டு சென்றது. இப்போது ஆட்சி அதிகாரம் கிடைத்துவிட்டதால் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம் என்பதில் எந்த நியாயமும் இல்லை.

ஏனென்றால், அடையாள மீட்பும் பொருளாதார வெற்றியும் தனித்தனியானவை அல்ல. எந்தவொரு பொருளாதார வளர்ச்சித் திட்டத்தையும் கலாசார நலன் நோக்கிலும் பார்க்கவேண்டும். எந்தவொரு கலாசார மீட்டெடுப்பையும் பொருளாதார நலன் சார்ந்தும் பார்க்கவேண்டும். பார்க்க முடியும்.

இல்லை, முழு பொருளாதார வளர்ச்சிதான் இப்போது முக்கியமென்றால் பாஜக அரசும் கட்சியும் முன்னெடுக்கும் திட்டங்கள், நடவடிக்கைகள் எல்லாம் யாருடைய பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றன என்பதையாவது கணக்கில் கொள்ளவேண்டும்.

அரசு கொண்டுவரும் பொருளாதாரத் திட்டங்கள் சலுகைகள் அனைத்தையும் இந்து விரோத சக்திகளும் இந்திய விரோத சக்திகளும் பயன்படுத்திக் கொள்வார்களென்றால் அந்த பொருளாதார வளர்ச்சியைப் பார்த்துப் பெருமைப்பட என்ன இருக்கிறது.

அதிலும் அடையாள மீட்பு நடவடிக்கைகளையும் கைவிட்டுவிட்ட நிலையில் பொருளாதார வளர்ச்சியும் எதிர்த்தரப்புக்கே பயன்படுமென்றால் அது இரட்டை தண்டனையாகவே ஆகும்.

இன்று இந்தியாவில் வெற்றிகரமாக விளங்கும் நிறுவனங்கள், துறைகள் எவை அவற்றில் இந்திய, இந்து நலன் சார்ந்த நிறுவனங்கள் எத்தனை என்று பார்த்தால் மிகப் பெரிய அதிர்ச்சியே ஏற்படும்.

வாகன உற்பத்தி நிறுவனங்களில் தொடங்கி தகவல் தொலை தொடர்பு நிறுவனங்கள் வரை அந்நிய நாட்டு நிறுவனங்களே முன்னணியில் இருக்கின்றன. அப்படியே இந்திய நிறுவனங்கள் அல்லது இந்திய சி.இ.ஓக்கள் முன்னணியில் இருந்தால் அவர்கள் இந்து, இந்திய எதிர்ப்பு மனநிலை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

மிக சமீபத்திய உதாரணம் சத்யா என்ற கிறிஸ்தவ நிறுவனத்தின் தீபாவளி விளம்பரப் பாடலானது இஸ்லாமிய பக்திப் பாடலின் நகலாக இருக்கிறது. பொட்டு வைக்காத பெண்கள் நமது விளம்பரங்களில் மாடலாக வருவதை தீபாவளி நேரத்தில் அதுவும் இப்போதுதான் எதிர்க்கவே நம்மால் முடிகிறது.

ஏதோ போராடியதும் அவர்கள் விட்டுக் கொடுப்பதுபோல் வருவதெல்லாம் வேறு அழித்தொழிப்புகளை, சுரண்டல்களை, அதிகாரக் கைப்பற்றல்களை மறைக்கும் முயற்சியே. இந்த அற்ப வெற்றிகள் எல்லாம் நம்மைப் போலிப் பெருமிதத்தில் ஆழ்த்த நடத்தப்படும் நாடகமே. அடிமரம் வேரொடு அறுக்கப்பட்டுவருகிறது.

சுருக்கமாகச் சொல்வதென்றால் கலாசார மீட்டெடுப்பைத் தள்ளிப் போட்டால் இந்திய நிறுவனங்கள், இந்தியாவில் இயங்கும் அந்நிய நிறுவனங்கள் எல்லாம் வளர்ச்சி அடையும். இந்தியாவும் இந்துவும் வளர்ச்சி அடையமாட்டார்.

யோகாவை உலகம் பூராவும் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கும் கையோடு யோகா இந்து மதத்துக்கு மட்டுமே சொந்தமல்ல என்று சொல்வது நிச்சயம் வரவேற்கத் தகுந்ததல்ல. யோகாவின் உண்மை இலக்கு நோக்கி உலகைத் திருப்பவது சிரமமென்றால் குறைந்தபட்சம் அதன் இந்து அம்சங்களை அங்கீகரிக்கவாவது செய்யவேண்டும்.

யோகாவைச் செய்யும் இந்து தனது இந்து அம்சத்தைவிட்டு விட்டு உலக மனிதராக ஆகக்கூடாது. யோகாவைச் செய்யும் உலக மனிதர் அதைச் செய்யும் நேரத்தில் இந்துவாக உணரவேண்டும். இந்து தேசியவாதியாக தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர் இதைத்தான் செய்யவேண்டும்.

பொருளாதார வளர்ச்சியும் கலாசார மீட்டெடுப்பும் ஒருங்கே நடக்கவேண்டும். மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வதென்றால் மேற்கத்திய பெயரைச் சூட்டிக் கொள்ளவேண்டும்; மேற்கத்திய பண்டிகை நாள்களில் மட்டுமே விடுமுறை எடுக்கவேண்டும்; திலகங்கள் இட்டுக்  கொள்ளக்கூடாது என்பதெல்லாம் கலாசார மீட்சிக்கு வழிவகுக்காது.

கார்ப்பரேட் நிறுவனங்களில் சரஸ்வதி பூஜையும் கொண்டாடுவோம் என்று சொல்லவேண்டும். இந்தக் கோரிக்கையை இந்தியப் பணியாளர்கள் முன்வைக்க இந்திய அரசு வழிவகுத்துத் தரவேண்டும். அந்நிய நாட்டு நிறுவனங்கள் வரி கொடுத்து நம் கஜானா நிரம்பினால் போதும் என்று மட்டுமே நினைக்கக்கூடாது.

பள்ளி கல்லூரிகளில் இந்து, இந்தியா பற்றிய உண்மை வரலாறைக் கற்றுத் தர முன்வரவேண்டும். இடதுசாரிகளால் நிரம்பியிருக்கும் கல்வித்துறையை முதலில் சீர் செய்யவேண்டும்.

இடதுசாரிகள் எங்கெல்லாம் அப்பிக் கொண்டு இருக்கிறார்களோ அந்த இடங்கள் அனைத்தையும் சீர்திருத்தவேண்டும். ஏழாண்டு ஆட்சி என்பது மிகப் பெரிய காலகட்டமே. ஒருவேளை அது சாத்தியமில்லையென்றால், வலதுசாரி எக்கோ சிஸ்டத்தை பலப்படுத்தவேண்டும்.

நடிகன் சூர்யாவை வைத்து புதிய கல்விக் கொள்கையை விமர்சித்தால் நடிகர் தனுஷை வைத்து புதிய கல்விக் கொள்கையை ஆதரித்துப் பேசவைக்கவேண்டும். சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டால், உடலுறுப்புகள், எலும்புகள் திருடிய பாதிரியும் அதுபோலவே ஜாமினில் வெளிவர முடியாத அளவுக்குச் சிறைப்படுத்தப்படவேண்டும்.

நரேந்திர மோதி மிகப் பெரிய யோகி. அவரைப் பற்றி எவ்வளவு விமர்சித்தாலும் அன்றலர்ந்த தாமரை மலர் போல் அவர் அதைத் தாங்கிக் கொள்கிறார். ஆனால், ஒரு பிரதமராக அவர் மீதும் அவர் முன்னெடுத்த திட்டம் மீதும் அவதூறுகள் பரப்பப்பட்டால் அதை எதிர்க்கும் வலுவான ஆயுதத்தை வலதுசாரிகள் வசமும் தரவேண்டும்.

சாதுக்கள் இருவர் நடு ரோட்டில் காவலர்களுக்கு முன்பாகப் படுகொலை செய்யப்பட்டால் கொலை செய்த கும்பலுக்கும் காவலர்களுக்கும் ஆயுள்தண்டனை உடனே விதிக்கவேண்டும்.

சாதுக்கள் கொல்லப்பட்ட இடத்தில் மிகப் பெரிய நினைவு மண்டபம் கட்டவேண்டும். கொல்லப்பட்ட சாதுவின் சமூக சேவை அமைப்புக்கு உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடை திரட்டித் தந்து அவருடைய சமூக நலத்திட்டங்களை அவர் பெயரிலேயே தேசம் முழுவதும் கொண்டுசெல்லவேண்டும்.

இந்து சாதுவைத்தானே கொல்ல முடியும். அவருடைய கருணையை, சமூக சேவையைக் கொல்லமுடியாது. அவர் கொல்லப்பட்ட பின் தான் அவருடைய வாழ்க்கையே ஆரம்பிக்கிறது என்று செய்துகாட்டவேண்டும்.

இந்துத்துவமென்றால் வன்முறையைக் கையில் எடுக்கும் இயக்கம் என்று எதிரிகள் குத்தும் முத்திரையை ஆக்கப்பூர்வமான பதிலடிகள் மூலம் மாற்றிக்காட்டவேண்டும். இந்துத்துவ பலிதானிகளுக்கு ராணுவ வீர்ர்களுக்குத் தரும் விருதுகளைத் தரவேண்டும்.

வெளிநாட்டில் இருந்து ஊடுருவும் தீவிரவாதிகளைத் திறமையாகத் தடுத்து நிறுத்தியிருப்பதுபோல் உள் நாட்டில் இந்து இயக்கத்தினர் படுகொலை செய்யப்படாத நிலையை உருவாக்கவேண்டும்.

காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் பிரிவினைவாத சக்திகளை அடக்கியதுபோல் தில்லி, பஞ்சாப், கேரளம், மஹாராஷ்டிரம், மேற்கு வங்காளம், தமிழகம் என தலைவிரித்தாடும் பிரிவினை சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும்.

இந்த மாநிலங்களில் எல்லாம் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தரவில்லை; அது இருந்தால்தான் ஆட்சி அதிகாரம் கைக்குக் கிடைக்கும். அதை வைத்துத்தான் எதையும் செய்ய முடியும் என்பது மிகவும் நியாயமான பதில்தான்.

அந்த மாநிலங்களில் நடக்கும் அனைத்து பிரிவினைவாத, அராஜக போராட்டங்கள் அனைத்தின் பின்னாலும் அந்தந்த மாநில அரசுகளின் வலுவான ஆதரவு இருப்பதை மறுக்கமுடியாது.

மத்திய-மாநில கூட்டாட்சி அமைப்பில் மத்திய அரசால் ஒரு எல்லைக்குமேல் எதையும் செய்ய முடியாது என்பதும் உண்மையே. ஆனால், இந்த பதிலை நீண்ட காலத்துக்குக் கேட்டுக் கொண்டிருக்க முடியாது.

இந்த மாநிலத்தின் முதலமைச்சர்கள் தொடங்கி எம்.எல்.ஏ. எம்பிகள் வரை அனைவருமே அத்தனைவகையான ஊழல், ஒழுக்கக்கேடு, அதிகார துஷ்பிரயோகம் என அனைத்துக் குற்றங்களிலும் சிக்கியவர்கள். பெரும்பாலானவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

ஒரு தேர்ந்த ராஜ தந்திரிக்கு இவையெல்லாம் வலுவான துருப்புச் சீட்டுகள். ஒவ்வொரு அயோக்கியனையும் தேசிய கீதத்தைப் போட்டுவிட்டு அதற்கேற்ப ஆடவைக்க முடியும். ஆனால், எதிர்த் தரப்போ ஜெய் ஹிந்த் சொல்லமாட்டேன் என்றும் ஒன்றிய அரசு என்றுதான் சொல்வேன் என்றும் அவர்களை ஆடவைத்துக் கொண்டிருக்கிறது.

நாம் நம் தரப்பு அரசியலை ஒழுங்காகச் செய்யாமல் இருந்துவிட்டு எதிர் தரப்பு சிறப்பாகச் செயல்படுவதைப் பார்த்து ஆவேசப்பட்டு என்ன பலன்.

தமிழகத்துக்கான பாஜகவின் வியூகம் மாறி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அனைத்து இடங்களுக்கும் அனைத்து தளர்வுகளும் அறிவித்தாயிற்று.  கோவிலுக்கு மட்டும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டுவரும் நிலையில் பாஜக எச்சரிக்கை செய்ததும் திமுக அடிபணிவதாகச் சொல்லப்படுவதெல்லாம் நிச்சயம் பெருமிதத்துக்குரியவை அல்ல.

ஊழல் நடக்காமல் தடுப்பதென்பதைவிட ஏற்கெனவே ஊழல் செய்து மாட்டியிருப்பவர்களைச் சிறையில் அடைப்பது மிக நல்ல பலனைத் தரும்.

பாஜக மீதான விமர்சனங்களை இரண்டு வகையில் புரிந்துகொள்ளவேண்டும்.

இஸ்லாமிய, கிறிஸ்தவ, கம்யூனிஸ சக்திகள் உலகளாவியவை. அவற்றின் முன்னால் இந்தியாவும் இந்துக்களும் மிகவும் வலிமை குறைந்தவர்களே. நம் தலைவர்களும் அப்படியானவர்கள்தான்.

காங்கிரஸையும் திராவிடக் கட்சிகளையும் பிராந்தியக் கட்சிகளையும் மட்டுமா இந்த சர்வ தேச மாஃபியா கைக்குள் போட்டிருக்கிறது. பாஜகவும் தேசிய சக்திகளுமே கூட இவர்களின் கைப்பாவைகள்தான். இது ஏற்றுக் கொள்ளக் கடினமாக இருக்கும்.

ஆனால், இந்து-இந்தியா சார்ந்து செய்ய வேண்டிய எளிய பல விஷயங்களைக்கூட செய்ய முடியாமல் இருக்கும் நிலையைப் பார்க்கும்போது ஒன்று வலதுசாரி தலைவர்களும் சர்வதேச மாஃபியாவின் பிடியில் சிக்கித்தான் இருக்கிறார்கள்; அல்லது வலது சாரி இயக்கங்களுக்குள்ளும் எதிரிகள் ஊடுருவி இருக்கிறார்கள். அல்லது வலது சாரித் தலைமையிலும் எதிரிகளே இருக்கிறார்கள். இந்த மூன்றில் முதல் இரண்டை நம்புவதே நல்லது.

எனவே பாஜக மற்றும் வலதுசாரித் தலைவர்கள் மேல் வைக்கப்படும் விமர்சனமானது அவர்களுடைய நேர்மை, திறமை மீதான விமர்சனம் அல்ல. ஏதோ ஒருவகையில் அவர்கள் தமது பாதகமான நிலையைப் புரிந்துகொண்டு எப்படியாவது தந்திரமாக எதையாவது செய்தாகவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் சொல்லப்படுபவைதான். முழுக்கவும் தேசம் மற்றும் மத அபிமானத்தில் சொல்லப்படுவதுதான். நேஷன் பர்ஸ்ட் என்பவர்களுக்கு இது எளிதில் புரியக்கூடிய விஷயமும் கூட.

இரண்டாவதாக, கலாசார மீட்பு என்பது மிகவும் சிக்கலான விஷயம். ஒரு தரப்புக்கு சீர்திருத்தமாகத் தோன்றும் விஷயம் மறு தரப்புக்கு சீர் கேடாகத் தோன்றலாம்.   

இந்த இடத்தில்தான் எது கலாசாரம்... எதைக் காப்பாற்றவேண்டும். எதைக் கைவிடவேண்டும் என்ற கேள்விகள் எழுகின்றன.

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா என்ற கேள்வி எழுந்தால் சுற்றுச் சூழல் மாசுபடாமல் விளக்குகளால் அலங்கரித்துக் கொண்டாடலாமே என்று ஒரு தரப்புசொல்கிறது.

நாட்டில் இருக்கும் அனைத்து ஐயப்பன் கோவில்களிலும் எல்லா வயதுப் பெண்களும் வழிபடுகிறார்களே. அப்படியானால் சபரி மலையிலும் வழிபடுவதில் என்ன தவறு என்று கேட்கிறது.

விநாயகர் சதுர்த்திக்கு சிறிய சிலைகள் வைத்து வழிபட்டாலே போதுமே என்று நினைக்கிறது. கோவில்களில் பெருமளவுக்கான பணம் முடங்கிக் கிடக்கிறதே... அதை வைத்து நாலு நல்ல காரியங்கள் செய்யலாமே என்று நினைக்கிறது. பக்தருடைய தாய் மொழியில் அர்ச்சனை செய்துகொள்ளலாமே என்று நினைக்கிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடிக்கும் பாரம்பரியத்தில் பல தரப்புகள் இருக்கத்தான் செய்யும். அதிலும் இஸ்லாம் போலவோ கிறிஸ்தவம் போலவோ இறுக்கமான மதம் இல்லை என்பதால் எல்லா விஷயத்துக்கும் மாற்றுக் கருத்து இருக்கத்தான் செய்யும்.

ஒருவகையில் அந்த மாற்றுக் குரல் ஒலிப்பதும் அதையும் மீறி மரபு செயல்படுவதும்தான் இந்து தர்ம்ம் உயிருடன் இருக்கிறது என்பதன் அடையாளம். எங்கே வேறுபாடுகள் இருக்கின்றனவோ அங்கேதான் உயிர்ப்பு இருக்கிறது. எந்திரங்களே ஒற்றைப்படையாக இருக்கும்.

இப்போது இதுபோன்ற கலாசார விஷயங்களில் பாஜக பெரிதும் நவீன மனங்கள்போல் சிந்திக்கவே விரும்புகிறது. பொருளாதார விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதால் இந்த விஷயங்கள் சார்ந்து நிதானமான, ஆழ்மான அலசல்கள் எதுவும் இருப்பதில்லை.

அதோடு இந்து ஒற்றுமை என்ற அரசியல் இலக்குவேறு கவனத்தில் இருப்பதால் எந்தக் கோரிக்கை யார் மூலம் வைக்கப்பட்டாலும் அதை நிறைவேற்றுவதிலேயே கவனமாக இருக்கிறது.

ஒருவகையில் பாஜகவுக்கும் இந்துத்துவர்களுக்கும் மிகவும் கஷ்டமான நிலைதான். இந்துக்களுக்கும் இந்தியாவுக்கும் நல்லது என்று நினைத்து ஒரு விஷயத்தைச் செய்வதன் மூலமே இந்து விரோதி என்றும் இந்திய விரோதி என்றும் முத்திரை குத்தப்படுவதென்பது விசித்திரமான வேதனைதான்.

கலாசார விஷயங்களில் முடிவெடுப்பது கடினம் என்பதால்தான் பொருளாதாரம் பக்கம் அதிகம் சாய்கிறார்களோ என்று கூட சில நேரங்களில் எண்ணத் தோன்றும். ஆனால், இந்தப் பிரச்னையைச் சமாளிக்க எளிய வழி இருக்கிறது.

முன்னோர்கள் ஒரு விஷயத்தை எப்படிச் செய்து வந்திருக்கிறார்களோ அதை அப்படியே செய்ய அனுமதிக்கவேண்டும். சீர்திருத்தமாக நினைப்பவற்றைத் தனியாக, புதிதாகப் பெரிய அளவில் செய்துகொள்ளவேண்டும்.

எதிர்த் தரப்பு என்ன காரணம் சொல்லி பாரம்பரியத்தைச் சீர்குலைக்க விரும்புகிறதோ அது சார்ந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையை அவர்களைக் கொண்டே எடுக்கவைக்கவேண்டும். பட்டாசு வெடிப்பதால் சுற்றுச் சூழல் மாசடைவதாக ஒரு பிரபலம் சொன்னால், சுற்றுச் சூழலைக் காப்பாற்றும் விஷயங்களில் அவர்களை ஆண்டுமுழுவதும் ஈடுபடச் சொல்லவேண்டும்.

தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யவேண்டும் என்று ஒருவர் சொன்னால், அவரை மசூதிக்கு அழைத்துச் சென்று தொழுகை அழைப்பை மொழிபெயர்த்து தமிழில் பாடும்படி அவரிடம் கேட்டுக்கொள்ளவேண்டும்.

மத்திய அரசுக்கு பொருளாதார இலக்குகள்தான் இருக்கின்றன என்றால் கலாசாரத்துறையிடம் இந்தப் பொறுப்பைவிடவேண்டும். தமிழகத்தில் இந்து தெய்வங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு இந்து அற நிலையத் துறையை பதில் சொல்லவைக்கவேண்டும். ராமர் வட நாட்டுக் கடவுள் என்று யாரேனும் சொன்னால், அதற்கான பதிலை இந்து அற நிலையத்துறை சார்பில் வழங்கவைக்கவேண்டும்.

ஏதேனும் திரைப்படத்தில் அல்லது புத்தகத்தில் ஒரு மதத்தை மட்டும் விமர்சித்து ஏதேனும் எழுதப்பட்டால் அதே விஷயம் சார்ந்து பிற மதங்களில் இருப்பவை பற்றியும் கேள்விகளை அதே படைப்பாளியைக் கொண்டே எழுப்ப வைக்கவேண்டும்.

கோவில் தேவை இல்லை; மருத்துவமனைதான் வேண்டும் என்று ஒருவன் சொன்னால், மசூதியும் சர்ச்சும் தேவை இல்லை மருத்துவமனைதான் வேண்டும் என்று அவனைக் கொண்டே சொல்லவைக்கவேண்டும். கழிப்பறைகளே முக்கியம்; கோவிலோ மசூதியோ சர்ச்சோ அல்ல என்று சொல்லவேண்டும்.

கடவுளை நம்புபவன் முட்டாள் என்று ஒரு கோவில் முன்னால் ஒரு சிலை இருக்குமென்றால், அதை சர்ச் மற்றும் மசூதி வாசலிலும் சிலை வைத்து எழுதிப்போடவேண்டும்.

இந்து மதம் தாக்கப்படும்போது பதிலுக்குப் பிற மதங்களைத் தாக்குவது சரியல்ல. அது சமூக அமைதிக்கு ஊறு விளைவிக்கும் என்ற நல்லெண்ணம் உண்டென்றால் இந்துக்களை அவமதிப்பதை நிறுத்த என்ன வழி உண்டோ அதை எடுத்தாகவேண்டும்

அன்பு, நல்லிணக்கம், நட்பு, மதிப்பு, மரியதை எல்லாம் இருவழிப்பாதையாக இருக்கவேண்டும். ஒரு தரப்பு மட்டுமே விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். இன்னொரு தரப்பு என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இருக்கக் கூடாது. அதிலும் பெரும்பான்மை சமூகம் இப்படியான அவமான்ங்களைத் தாங்கிக் கொண்டு வாழந்தாகவேண்டும் என்று எந்த அரசியல்வாதியும் நிர்பந்திக்கக்கூடாது.

இப்படியான நேரங்களில் மக்கள் எழுச்சி வரவேண்டும் என்பதற்காக மெளனமாக இருப்பதாகச் சொல்வதையெல்லாம் ஒரு எல்லைவரைதான் ஏற்க முடியும். அரசும் அதிகாகார வர்க்கமும் நமக்கு உதவும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் மக்கள் துணிந்து தமது குரலை எழுப்ப முன்வருவார்கள். இல்லையென்றால் உள்ளுக்குள் புழுங்கித்தான் சாவார்கள். அந்த வேதனையை அவர்களுக்குத் தரவே கூடாது.

*

இந்து ஒற்றுமையைக் கொண்டுவர இஸ்லாமிய கிறிஸ்தவ எதிர்ப்பு தவறு. பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டில் அமைதியான சூழல் அவசியம் என்று என்று ஒருவர் யோசிப்பாரென்றால் நிச்சயம் வேறு வழிகளை முன்னெடுக்கலாம்.

நமக்கான பொது எதிரி பிரிட்டிஷார். இந்த தேசத்தை மிக மிக மோசமாக அடக்கி ஆண்டவர்கள். கலாசார மீட்பு என்பது உண்மையில் அந்தத் தளத்தில் நிறையவே நடந்தாகவேண்டியிருக்கிறது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டை என்ற பெயரை மாற்றுவதில் தொடங்கி நீதிமன்ற நடைமுறைகளை மாற்றி அமைப்பதுவரை எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கின்றன.

இந்து நலன் என்று தனியாக ஒன்றை முன்னெடுப்பது அவசியமில்லை என்று கருதினால் இந்திய நலன், இந்திய அடையாள மீட்பு என்பதையாவது பாஜக முன்னெடுக்கவேண்டும்.

நமது நாட்டு தடுப்பூசியை அங்கீகரிக்காத நாட்டின் தடுப்பூசியை நாமும் அங்கீகரிக்கமாட்டோம் என்பது நல்ல பதிலடிதான். ஆனால், பிரிட்டிஷ் அடிமைத்தளையில் இருந்து நாம் மீள ஏராளம் செய்ய வேண்டியிருக்கின்றன.

ராம் லீலா மைதானத்தில் நடக்கும் ராவண வதம் போல் ஜெனரல் டயரின் பிரமாண்ட உருவத்தை துப்பாக்கியால் அனைவரும் சுடும் ஒரு விழாவை ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டத்திலும் ஏற்பாடு செய்யவேண்டும்.

மனித நேயமும் நேர்மையும் மனசாட்சியும் கொண்ட ஆங்கிலேயர்களிடம் பேசி இந்த விழாவை இங்கிலாந்தில் கூட நடத்த ஏற்பாடு செய்யலாம்.

கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர பெரும் சட்டப் போராட்டத்தை ஆரம்பிக்கலாம். தேசம் முழுவதிலும் அதற்கான படிவத்தில் கையெழுத்து சேகரிக்கலாம்.

தியேட்டர்களில் ஜனகனமண பாடலை ஒலித்தது போல் அனைத்து மத்திய மாநில அரசு அலுவலகங்களில் திங்கள் தோறும் கொடி ஏற்றி தேசிய கீதம் இசைக்கும்படி உத்தரவிடலாம்.

பொருளாதார வெற்றிகளோடு கலாசார மீட்டெடுப்பும் தேச பக்தி உருவாக்கமும் மிக மிக அவசியம்.

வெறும் பொருளாதார வெற்றி என்பது உள்ளீடற்றது. வேரற்று வீழ்த்திவிடும். என்றைக்கு பிராமணர்கள் அரசாங்க வேலை என்று பொருளாதார வளம் தேடி பட்டணத்துக்குப் புறப்பட்டார்களோ அன்றைக்கே அக்ரஹாரங்களின் வீழ்ச்சி தொடங்கியது. மதராஸ், தில்லி என்று இடம் பெயர்ந்தவர்கள் அமெரிக்கா, ஐரோப்பா என்று மேலும் பொருளாதார வளர்ச்சியை அடைய ஆரம்பித்ததும். அக்ரஹாரங்கள் முற்றாகக் கைவிடப்பட்டன.

அக்ரஹார உதாரணம் என்பது எளிதில் புரிந்துகொள்ளச் சொல்லப்பட்டதுமட்டுமே. நம் அனைத்து ஜாதிகளிலும் அனைத்து பாரம்பரிய மரபுகளிலும் இதுதான் நிலமை. எங்கெல்லாம் பொருளாதார வளார்ச்சி இருக்கிறதோ அங்கெல்லாம் மரபுடனான, கலாசாரத்துடனான தொடர்பு அறுந்திருக்கிறது.

பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை.

அடையாளமில்லார்க்கு எவ்வுலகமும் இல்லை.

Comments